Sunday, 12 May 2013

மௌனம் உடைந்தது வார்த்தை பறவையானது - அத்தியாயம் -1

மௌனம் உடைந்தது வார்த்தை பறவையானது - முன்னுரை


குருவே போற்றி

முன்னுரை : 

உனக்காக நான் எழுப்பவிருக்கும் காதல் சின்னத்தின் நுழைவாயில்தான் அந்த தாஜ்மஹால் என்ற கம்பீரத்தோடுதான் ஒவ்வொரு காதலனும் காதலின் உச்சத்தைத் தொட எத்தனிக்கிறார்கள்.

உலகம்  மூன்று பங்கு நிலத்தாலும், ஒரு பங்கு நீராலும் சூழப்பட்டது. ஆனால் உலகம் முழுவதுமே காதலால் சூழப்பட்டது என்றால் அது மிகையல்ல. மனிதர்கள் நெருங்காத காட்டுச்செரிவில் கூட பறவைகள் பூச்சிகள் காதலிக்கின்றனவே.

காதல் ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் உலக மக்கள் தொகை இரண்டு அல்லது அதற்கும் குறைவாக இருந்திருக்கும். ஆனாலும் காதல் ஒரு இனப்பெருக்க வங்கி அல்ல. அது மனதை உழுவதற்கான யுக்தி.

காதலின் நோக்கம் ஒன்றும் ஒன்றும் சேர்ந்து மூன்றாவதல்ல. ஒன்றும் அதில் சேர்ந்த இன்னொன்றும் கரைந்து பூஜ்ஜியமாகிப் போகவேண்டும்.
காதல் ஒரு பைத்தியக்காரத்தனம் என்பார்கள்.
போகட்டும் பைத்தியங்கள்தான் உலகின் உண்மை சுகவாசிகள்.  

புல்வெளியில் நடக்கும் காதலர்களை பார்க்கிறோம். அவர்கள் உண்மையில் புல்வெளியில் நடக்கவில்லை. அவர்கள் நடப்பது பால்வெளியில்.
அவர்களிடம் கொண்டு பொய் ஒரு டம்ளர் விஷத்தைக் கொடுங்கள், குடித்துவிட்டு இன்னொரு டம்ளர் கேட்ப்பார்கள்.

காதல் சுகமானது மட்டுமல்ல. லேசானதும் கூட. காதலிப்பவர்கள் அன்றாட வாழ்க்கையில் எப்பொழுதுமே சுய நினைவோடு இருப்பதில்லை.
அழகழகான கனவுகளை சுமந்து கொண்டு கோழி இறகாய் பறந்து கொண்டிருப்பார்கள்.

காதலொன்றும் பாவமான காரியமல்ல. நம் சமுதாயத்தின் கட்டுப்பாடுகளும் தவறானவைகள் அல்ல. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானது என்று ஒருசிலர் தவறாக சித்தரித்து விட்டிருக்கிறார்கள்.
உண்மையான காதலர்களுக்கு திருமணம் கூட சம்பிரதாயத்துக்குத்தான்.
இரண்டு மனங்களை பரிமாறிக்கொண்டு ஆனால் இரண்டு மாலைகளை மாற்ற முடியாத அவல நிலை, இந்த மனித பிரவிகளுக்குத்தான். பறவைகளுக்கோ, விலங்குகளுக்கோ அல்ல.

உருகி உருகி உள்ளே சொல்லப்பட்டிருக்கும் காதல் உண்மையில் காதலர்களுக்காக  மட்டுமல்ல.
காதல் மீது யாரேனும் தவறான மரியாதை கொண்டிருப்பாரேயானால் அவர்களுக்காக.

எங்கேயோ கேட்ட காதல் ஒன்று எனக்குள் வந்து தன்னை எழுதிக்கொண்டது. படித்துப்பார்த்தேன். அதில் நிறைய காதலும் கொஞ்சம் கண்ணீரும் இருந்தது.
எவ்வளவோ முயன்று பார்த்தும் தேம்பித் தேம்பி அழும் என் பேனாவிற்கு ஆறுதல் சொல்ல என்னால் முடியவில்லை

இந்த புத்தகத்தை படித்துவிட்டு துடிக்கும் உங்கள் இதயத்திற்கு மட்டும்
எப்படி என்னால் ஆறுதல் சொல்ல முடியும்.

அன்புடன்
ரக்சகன்
13-05-2013

பென்சிலை சீவிடும் "பெண்"சிலை!

ஊருக்கு சென்றிருந்தேன்
அவள் என் வீடிற்கு வந்திருந்தாள்
என்னை பார்த்ததும்
ஓடி ஒளிந்து கொண்டாள்
சிறிது நேரத்திற்கு பிறகு என்னருகில் வந்தாள்
வெட்கம் வந்ததால்
முகத்தை குனிந்து நின்றாள்.
முகத்தை நிமிர்த்தி
... என்னை பிடிக்குமா என்றேன்
பிடிக்கும் என்றாள்
எவ்வளவு பிடிக்கும் என்றேன்
நிறைய என்றாள்
அப்படிஎன்றால்
நான் கேட்கும் போதெல்லாம்
முத்தம் கொடுக்க வேண்டும் என்றேன்
சரி என்றாள்
நீ கேட்காமலேயே
உனக்கு முத்தம் கொடுப்பேன் என்றேன்
முகத்தை மூடிகொண்டாள்
என் விரலுக்கு சொடுக்கு எடுத்து விடவேண்டும் என்றேன்.
ம் என்றாள் .
மாமா என்றெல்லாம் வேண்டாம்
என் பேர் சொல்லி கூப்பிடு என்றேன்
சரி என்றாள்.
என்னை கட்டிகொள்கிறாயா என்றேன்
சிறிது யோசித்து விட்டு
ம் என்றாள்.
இப்பொழுதே ஓடிப்போகலாமா என்றேன்
யோசிக்காமல்
சிரித்துக்கொண்டே தலையசைத்தாள்
மூன்று வயதே ஆன
என் அக்கா மகள்.
பென்சிலை சீவிடும் என் பெண்சிலை!

உன்னிடம் இருக்கும் அழகு

சிலர்
அழகாக பிறந்திருக்கிறார்கள்
சிலர்
அழகாக சிரிக்கிறார்கள்
சிலர்
அழகாக பேசுகிறார்கள்
சிலர்
அழகாக நடக்கிறார்கள்
சிலர்
அழகாக கண் சிமிட்டுகிறார்கள்
... சிலர்
அழகாக திரும்பி பார்க்கிறார்கள்
சிலர்
அழகாக ஆடை உடுத்துகிறார்கள்
ஆனாலும்
சிலர்தான்
அழகாக வாழ்கிறார்கள் .