குருவே போற்றி
முன்னுரை :
உனக்காக நான் எழுப்பவிருக்கும் காதல் சின்னத்தின் நுழைவாயில்தான் அந்த தாஜ்மஹால் என்ற கம்பீரத்தோடுதான் ஒவ்வொரு காதலனும் காதலின் உச்சத்தைத் தொட எத்தனிக்கிறார்கள்.
உலகம் மூன்று
பங்கு நிலத்தாலும், ஒரு பங்கு நீராலும் சூழப்பட்டது. ஆனால் உலகம் முழுவதுமே காதலால் சூழப்பட்டது என்றால் அது மிகையல்ல. மனிதர்கள் நெருங்காத காட்டுச்செரிவில் கூட பறவைகள் பூச்சிகள் காதலிக்கின்றனவே.
காதல் ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் உலக மக்கள் தொகை இரண்டு அல்லது அதற்கும் குறைவாக இருந்திருக்கும். ஆனாலும் காதல் ஒரு இனப்பெருக்க வங்கி அல்ல. அது மனதை உழுவதற்கான யுக்தி.
காதலின் நோக்கம் ஒன்றும் ஒன்றும் சேர்ந்து மூன்றாவதல்ல. ஒன்றும் அதில் சேர்ந்த இன்னொன்றும் கரைந்து பூஜ்ஜியமாகிப் போகவேண்டும்.
காதல் ஒரு பைத்தியக்காரத்தனம் என்பார்கள்.
போகட்டும் பைத்தியங்கள்தான் உலகின் உண்மை சுகவாசிகள்.
புல்வெளியில் நடக்கும் காதலர்களை பார்க்கிறோம். அவர்கள் உண்மையில் புல்வெளியில் நடக்கவில்லை. அவர்கள் நடப்பது பால்வெளியில்.
அவர்களிடம் கொண்டு பொய் ஒரு டம்ளர் விஷத்தைக் கொடுங்கள், குடித்துவிட்டு இன்னொரு டம்ளர் கேட்ப்பார்கள்.
காதல் சுகமானது மட்டுமல்ல. லேசானதும் கூட. காதலிப்பவர்கள் அன்றாட வாழ்க்கையில் எப்பொழுதுமே சுய நினைவோடு இருப்பதில்லை.
அழகழகான கனவுகளை சுமந்து கொண்டு கோழி இறகாய் பறந்து கொண்டிருப்பார்கள்.
காதலொன்றும் பாவமான காரியமல்ல. நம் சமுதாயத்தின் கட்டுப்பாடுகளும் தவறானவைகள் அல்ல. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானது என்று ஒருசிலர் தவறாக சித்தரித்து விட்டிருக்கிறார்கள்.
உண்மையான காதலர்களுக்கு திருமணம் கூட சம்பிரதாயத்துக்குத்தான்.
இரண்டு மனங்களை பரிமாறிக்கொண்டு ஆனால் இரண்டு மாலைகளை மாற்ற முடியாத அவல நிலை, இந்த மனித பிரவிகளுக்குத்தான். பறவைகளுக்கோ, விலங்குகளுக்கோ அல்ல.
உருகி உருகி உள்ளே சொல்லப்பட்டிருக்கும் காதல் உண்மையில் காதலர்களுக்காக
மட்டுமல்ல.
காதல் மீது யாரேனும் தவறான மரியாதை கொண்டிருப்பாரேயானால் அவர்களுக்காக.
எங்கேயோ கேட்ட காதல் ஒன்று எனக்குள் வந்து தன்னை எழுதிக்கொண்டது. படித்துப்பார்த்தேன். அதில் நிறைய காதலும் கொஞ்சம் கண்ணீரும் இருந்தது.
எவ்வளவோ முயன்று பார்த்தும் தேம்பித் தேம்பி அழும் என் பேனாவிற்கு ஆறுதல் சொல்ல என்னால் முடியவில்லை
இந்த புத்தகத்தை படித்துவிட்டு துடிக்கும் உங்கள் இதயத்திற்கு மட்டும்
எப்படி என்னால் ஆறுதல் சொல்ல முடியும்.
அன்புடன்
ரக்சகன்
13-05-2013
No comments:
Post a Comment